×

விஷால் புகார் எதிரொலி சென்சார் போர்டு அதிகாரிகள் மீது வழக்கு: சிபிஐ நடவடிக்கை

மும்பை: சென்சார் போர்டு லஞ்சம் கேட்டதாக விஷால் அளித்த புகாரின் அடிப்படையில், சென்சார் போர்டு அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்த மார்க் ஆண்டனி படம் சமீபத்தில் வெளியானது. தமிழில் ஹிட் ஆனதை தொடர்ந்து, இந்த படத்தின் இந்தி டப்பிங்கை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சூழ்நிலையில், விஷால் சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டார். அதில், மார்க் ஆண்டனி படத்தின் இந்தி டப்பிங்கை வெளியிடுவதற்கு மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாகவும், ரூ.6.5 லட்சம் கொடுக்கவேண்டியிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், வெளியிடுவதற்கான அனுமதி வழங்குவதற்கு முன்பாக படத்தை பார்ப்பதற்காவே ரூ.3 லட்சம் கேட்டனர். பின்னர் சென்சார் சான்றிதழ் வழங்க ரூ.3.5 லட்சம் கேட்டனர் என்று குற்றம் சாட்டியிருந்தார். மேலும், மேற்கண்ட மொத்த லஞ்சத் தொகையான ரூ.6.5 லட்சத்தை மேனகா என்ற இடைத்தரகர் மூலமாக இரண்டு தவணைகளில் கொடுத்ததாக கூறினார். படம் வெளியிடுவதற்கு நிர்ணயித்த தேதிக்கு 15 நாட்களே இருக்கும் நிலையில், லஞ்சம் கொடுப்பது வழக்கமன நடைமுறைதான் என்று கூறியதால் வேறு வழியின்றி பணத்தை வழங்கினோம்.

லஞ்ச தொகையை டெபாசிட் செய்த வங்கிக் கணக்கு விவரங்களையும் வெளியிட்ட விஷால், இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்திருந்தார். இந்த பரபரப்பு குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே, விஷால் வீடியோவில் தெரிவித்துள்ள புகாரின் அடிப்படையில் மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் சிலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

திரைப்படத்தின் இந்தி டப்பிங் பதிப்பை வெளியிடுவதற்காக 2 பெண்கள் உட்பட 3 இடைத்தரகர்கள் ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், பின்னர் ரூ.6.54 லட்சத்தை பெற ஒப்புக் கொண்டு அந்த பணத்தை பெற்றுக் கொண்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எப்ஐஆரில் சென்சார் போர்டு அதிகாரிகள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. 2 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மெர்லி் மேனகா, ஜீஜா ராம்தாஸ், ராஜன் ஆகிய மூன்று தரகர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

புகார்தாரரிடம் இருந்து ரூ.6.54 லட்சத்தை பெற்றுக் கொண்ட மேனகா, அதனை ராம்தாஸ் மற்றும் ராஜன் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளதாகவும், லஞ்சப்பணத்தை கொடுத்த பிறகு ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து மேனகாவின் வங்கிக் கணக்கில் ரூ.20,000 டெபாசிட் ஆகியுள்ளதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புகார் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மும்பை உட்பட சொந்தமான இடங்களில் ரெய்டுகள் நடத்தப்பட்டதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் சிபிஐ அதிகாரிகள் கூறினர்.

The post விஷால் புகார் எதிரொலி சென்சார் போர்டு அதிகாரிகள் மீது வழக்கு: சிபிஐ நடவடிக்கை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vishal ,Censor Board ,CBI ,Mumbai ,SJ Surya ,Mark Antony ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மோதல்..!!